Tuesday, 30 August 2016





                                                செவாலியே விருது                



             கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமலகாசனுக்கு பிரான்சு அரசு செவாலியே விருது அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது. இவ்விருது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இவ்விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழகத்தில் கமல்தான் பெறுகிறார் என்று பரவலாக பேசப்பட்டு பேசப்பட்டு வருகிறது. பல்வேறு துறை சார்ந்தவர்களிடமிருந்தும், அரசியல் வாதிகளிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் சிவாஜி கணேசனுக்கு பிறகு  கமல் தான் வாங்குகிறாரா என்றால் ஏற்றுக்கொள்ளமுடியாத செய்தியாகும்.


           புதுச்சேரியை சேர்ந்த மதன கல்யாணி என்பவர் இதற்கு முன்னதாகவே 2002 ஆம் ஆண்டு இவ்விருதை பெற்றுள்ளார். இவர் புதுச்சேரி பிரான்சு கல்லூரியில் 41 ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். தமிழ் மொழியை தேர்வு செய்து படிக்கும் அயல்நாட்டவருக்கு தமிழ் மொழி, தமிழரின் கலாச்சாரம், பண்பாடு , பழக்கவழக்கங்களை கற்பித்து வந்துள்ளார். இவர் பிரான்சு மொழியில் முதுகலை பட்டமும், தமிழ் மொழியில் புலவர் பட்டமும் பெற்றவர். அதுமட்டுமல்லாது பல நூல்களையும் இயற்றியுள்ளார், சில தமிழ் நூல்கள் மற்றும் கலைகளை பற்றி பிரான்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார். சிறந்த இலக்கியவாதியான இவருக்கு பிரான்சு அரசு தாமாகவே முன்வந்து செவாலியே விருதை விட உயர்ந்த விருதான ஒபிசியே என்ற விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது. இவ்விருதை பெற்ற முதல் இந்திய பெண்மணி மதன கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது.


           தமிழகத்தை சேர்ந்த alex என்பவர் 2010 ஆம் ஆண்டு செவாலியே விருதை பெற்றுள்ளார். இவர் கரகாட்டம் , சிலம்பம் , மயிலாட்டம் , மல்யுத்தம் மற்றும் மேஜிக் கலைகளிலும் கைதேர்ந்தவர் ஆவார்.மேலும் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.


           கலை , இலக்கியம், ஆழ்ந்த அரசியல் சிந்தனை, பகுத்தறிவு  மற்றும் புதிய தொழில்நுட்பத்தை தமிழ் திரையுலகத்திற்க்கு அறியமுகப்படுத்திய கமல் என்ற கலைஞன் செவாலியே விருதுக்கு தகுதியானவர் தான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தில்லை. ஆனால் திரையுலகில் நடக்கின்ற விழாக்களோ , தேர்தலோ , விருதுகளோ ஏன் மிகைப்படுத்தப்பட்டு , மற்றவைகளெல்லாம் மழுங்கடிக்கப்படுகிறது.சட்டப்பேரவை தேர்தலின் முக்கியத்துவத்தை விட  நடிகர் சங்க தேர்தலை நோக்கி மக்களின் எண்ணம் திரும்புகிறது, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான மக்களின் பார்வையை கபாலி படம் திசை திருப்புகிறது, இந்த அளவுக்கு தமிழ் மக்கள் நடிகர், நடிகைகளின் மீது ஆதித பாசம், அவர்கள் பேசும் வசனங்களின் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டமையால் என்னவோ , இன்று எம்மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஐந்து முதலமைச்சர்களை திரைதுறையிலிருந்து மட்டும் நாம் தேர்ந்தெடுத்துள்ளோம்.

          தமிழகத்தில் காமராஜர் , கக்கன் , ஜீவானந்தம் என உன்னத அரசியலுக்கு உதாரணமாக இருந்த தலைவர்களின் வரிசையில் தான் இன்று குஷ்பூ , நக்மா , நமீதா போன்றோர்கள் வந்துள்ளார்கள் என்றால் தமிழர்களின் புதிய அரசியல் சிந்தனையும், பரந்துபட்ட புத்திசாலித்தனமும் தான் காரணம்.


                   " படித்த படிப்பெல்லாம் பரணியை சூழ 
                     நடித்த   நடிப்பெல்லாம் நாட்டை ஆள 
                     விசுவாசமேற்று வீழ்ந்ததாம் காலில் சில 
                     வந்து சேர்ந்ததாம் பதவிகள் பல....!!!!! "
                                                                    - தமிழ்நாடு 
                                                                          







Wednesday, 17 August 2016


                                

         இல்லாமலில்லை


சூத்திரமில்லா கணக்கில்லை
      தோல்வியில்லா வெற்றியில்லை
 கனவில்லா இலட்சியமில்லை
       சாதனையில்லா சரித்திரமில்லை 

  உனக்கெவரும் உட்சமில்லை
 முயன்றால் முடியாததில்லை
      நேர்மைக்கிங்கு பரிச்சயமில்லை 
  இங்கெதுவும் நிச்சயமில்லை 

  விவசாயில்லா உணவில்லை
 பாகுபாடில்லா மனிதரில்லை 
 வஞ்சமில்லா நெஞ்சமில்லை
            லஞ்சமில்லா அரசியலில்லை.....!!!!!!
 

Sunday, 14 August 2016

         சுதந்திரம் சுதந்திரம்     


1947 ஆகஸ்ட் பதினைந்து , அந்நியர் வெளியேற்றம் 
2016 ஆகஸ்ட் பதினைந்து , அந்நார்களின் கையே ஏற்றம் 

பாரம்பரியம் , கலாச்சாரம் மறைகிறதே 
கோக்கும் , பெப்சியும் முதலீடாய் நுழைகிறதே 

மக்களுக்கான சட்டமன்றமாம், சுயநலத்துக்காக வெளிநடப்பு 
என் நாட்டின் தலைப்பகுதியில் என்றுமே பதபதைப்பு 

சியாச்சின் உச்சியிலே எவருக்கும் உறக்கமில்லை 
அடித்தட்டில், அரசியலால் எவ்வித தாக்கமுமில்லை 

அடிமை தளத்திலிருந்து மீளப் போராட்டம் அன்று 
அடிப்படை வசதி கூட இல்லா திண்டாட்டம் இன்று 

விவசாயின் தற்கொகொலையோ லட்ச எண்ணிக்கை  - தற்போதைய
அரசியல் சித்தாந்தம் மாறுமென இன்றும் நம்பிக்கை 

அடடா! அடடா ! வளர்ச்சி ! வளர்ச்சி ! வளர்ச்சி !!!!
வந்ததே எழுபதமாண்டு சுதந்திரதின நிகழ்ச்சி ! நிகழ்ச்சி!!!
சாதி , மத , இன , மொழி வேறுபாடு கலைந்து 
சமத்துவம் , சமதர்மம் தளைத்தோங்க 
மகிழ்ச்சி ! மகிழ்ச்சி ! மகிழ்ச்சி !!!!!!!!


                                                                                                                   

Monday, 8 August 2016

           இரட்டை வேடங்கள் 

               

             1) நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன்தான் உலக பொருளாதாரம் மந்தமான நிலையிலும் இந்தியாவின் பொருளாதாரம் GDP 7.6 ஆக உயர்ந்ததுள்ளது. அதுமட்டுமல்லாது அந்நிய முதலீடு 53% இந்தியாவில் உயர்ந்துள்ளது என நிதி அமைச்சர் பெருமையடித்துக்கொள்ள அதையே நமது பாரத பிரதமரும் வழிமொழிந்தார் அதோடு மட்டுமல்லாது எங்கள் ஆட்சியின் ஈராண்டு ஆட்சியின் சாதனை என்று பெரிய விழாவையே எடுத்துவிட்டனர். 2014 நாடாளுமன்ற போட்டியின்போது மோடி அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள அனைத்து கருப்புபணத்தயும் மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கியிலும் 15 லட்சம் போடப்படும் என்றார் அனால் இன்று எங்கள் ஆட்சியில் தான் அந்நிய முதலீடு அதிகமாக ஈர்க்கப்படுகிறது என்கிறார்.இந்தியாவில் பல முக்கிய துறைகளில் பாதுகாப்பு துறை உட்பட 100 % அந்நிய முதலீடு அனுமதிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ஒருவேளை வெளிநாட்டில் உள்ள கறுப்புப்பணம் எல்லாம் இவ்வாறாக தான் மீட்கின்றனரோ என எண்ண வைக்கிறது.



              2)வழக்கம்போல் இந்த அரசாங்கத்தின் முகத்திரையை மீண்டும் ஒருமுறை கிழித்துள்ளது தணிக்கை துறை(CAG). கடந்த ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் செங்கோட்டையில் உரையாற்றும்போது மக்களின் வரிப்பணம் 15000 கோடி வரிப்பணம்  திருடப்பட்டுவந்தது அதை நங்கள் ஆதார், வங்கி கணக்கு மூலம் தடுத்து நிறுத்தியுள்ளோம்.  இதுமட்டுமல்லாது பல வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுத்ததன் மூலம்(give itup ) 2014-2015 மற்றும் 2015-2016 நிதியாண்டில் 22,000 கோடி ரூபாயை அரசு மிச்சப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ஆனால் அப்படி விட்டுக்கொடுத்ததன் மூலம் 2000 முதல் 3000 கோடி வரை மட்டுமே மிச்சமாகியுள்ளது என்றும் மீதி தொகை இந்தியா இறக்குமதி செய்யும் எல்.பி.ஜி யின் விலை உலக சந்தையில் மிகவும் குறைந்ததே காரணம். ஆனால் மத்திய அரசும், பா.ஜா.க  வும் இந்த விசயத்தில் உண்மைக்கு மாறான செய்திகளை குறிவருகின்றார்கள் என தணிக்கை துறை மீண்டும் ஒருமுறை இவர்களின் குளறுபடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.


              3) உத்திரகாண்டை சார்ந்த பா.ஜா.க  எம்.பி தருண்விஜய் திருவள்ளுவர் திருப்பயணம் தொடங்கி, இந்தியாவில் அனைவரின் வீட்டிலும் திருவள்ளுவர் படம் இருக்க வேண்டும், அனைத்து மாநிலங்களிலும் திருக்குறளை பாடமாக வைக்க வேண்டும் என்கிறார். வள்ளுவரின் புகழ் கொஞ்சம் அறிந்த தமிழகத்திலிருந்து தொடங்கியதிற்கு பதிலாக டெல்லி முதல் நாக்பூர் வரை சென்றுருந்தால் அவரது அமைப்பிற்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும்
ஐயனின் புகழை பரப்பிருக்கலாம். திருவள்ளுவரை அவர் ஒரு தலித், தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என கூறும் ஜாதி, மத வெறிபிடித்த அறிவுஜீவிகள் இருக்கையில் தமிழ்மீது பற்றுக்கொண்டு அவர் எடுத்த நடவடிக்கைகள் மட்டுமல்லாது அவரும் போற்றுதலுக்கு  உரியவர்தான். இது ஒருபுறம் இருக்க  இவர் சார்ந்திருக்கும் கட்சியே மத்திய அரசு நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களில் இந்தி,  பல்கலை கழகங்களில் இந்தி திணிப்பு, வடநாட்டு பல்கலை கழகங்களில் உள்ள தமிழ் ஆய்வு வகுப்புகளுக்கு தமிழின்மீதுள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக ஆசிரியர்களை சரியாக நியமிப்பதில்லை, சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சம்ஸ்கிருதம் வாரக் கொண்டாட்டம் என இந்தியை திணிக்க பாடுபடுகிறது.

            
           4) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்ல என சொல்லி தினமும் ஒரு தலித் மக்களின் வீட்டில், மத்தியில் ஆளும் கட்சியின் தேசிய தலைவரும் , தமிழ்நாட்டின் மாநில தலைவரும் உணவுண்டு வரும் அதே வேலையில் தான் நாட்டின் பல இடங்களில் மாட்டுக்கறி வைத்துள்ளதாக கூறி தலித் சமூகத்தினரை காவல்துறையின் முன்னிலையில் அவர்களின் கைகுச்சியாலேயே தாக்கப்படுகின்றனர். மறுபுறம் இந்தியாதான் மாட்டுக்கறி ஏற்றுமதியில் உலகளவில் இரண்டாவது இடத்தில உள்ளது அதுவும் வரும் சில மாதங்களில் முதலிடத்தில் இருக்கும் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் யாரும் மாட்டை கொன்று கறியை  சாப்பிட்டுவிடக்கூடாது அது இந்துமதத்திற்கு எதிரானது மட்டுமல்லாது அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. அனால் நாங்கள் மாட்டை கொன்று வெளிநாடுகளுக்கு மட்டும்  ஏற்றுமதி செய்வோம். அதில் தெய்வக்குத்தம் ஒன்றும் வந்துவிடாது இந்தியாவில் சாப்பிட்டால் மட்டும்தான் தெய்வக்குத்தம்.


            5) இவையெல்லாம் ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டு அரசியலை எட்டிப்பார்த்தால் கொஞ்சம் வியப்பாகதான் இருக்கிறது. கேக்கிறவன் கேனயனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம் என்பது போல தமிழக சட்டசபையில் அ.தி.மு.க வை சார்ந்த ஒரு எம்.எல்.ஏ அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் ஒரு பெண் அதிபர் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதுற்கு எங்கள் புரட்சித்தலைவி அம்மா தான் காரணம் என அனைவரையும் மெய் சிலிர்க்கவைத்துவிட்டார். அதுசரி அடுத்த அமைச்சர்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பர்.


"அரசியல் எனும் ஆழ்கடலில் தரைதட்டி நிற்கும் கப்பலாய்,
அறியாமை எனும் நீரினால் சூழப்பட்டு சூழ்நிலை கைதிகளாகிவிட்டோம் "